மினி லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூரில் இருந்து பாகலூர் வழியாக கர்நாடகாவுக்கு மினி லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்:
திருப்பத்தூரில் இருந்து பாகலூர் வழியாக கர்நாடகாவுக்கு மினி லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பாகலூர் வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று மாநில எல்லையோரம் பாகலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில், 5 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பறக்கும் படையினர் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கெலமங்கலம் பகுதியை சேர்ந்த ரோஷன் (வயது 34) என்பது தெரியவந்தது.
டிரைவர் கைது
இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை பறக்கும் படையினர் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் 5 டன் ரேஷன் அரிசி, மினி லாரி ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.