மினி லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


மினி லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி வழியாக கர்நாடகாவிற்கு மினி லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி வழியாக கர்நாடகாவிற்கு மினி லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை குருபரப்பள்ளி - தீர்த்தம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கொத்தகிருஷ்ணப்பள்ளி அருகே வந்த மினி லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அதில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

டிரைவர்-கிளீனர் கைது

அதில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா முருக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது31) என்பதும் கிளீனர் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் (27) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பாலக்கோடு பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 10 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

200 டன் அரிசி பறிமுதல்

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.


Next Story