ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்-தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
தரமான பொருட்கள்
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 3-வது காலாண்டு மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்படி பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்தும், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்க கொள்முதல் செய்யும் பணிகள் தர்மபுரி, அரூர் மற்றும் பென்னாகரத்தில் நடைபெற்று வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
செறிவூட்டப்பட்ட அரிசி
இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படும். செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகையை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் அண்ணாமலை, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.