கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கிய 9¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கிய 9¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

தஞ்சை அருகே காலிமனையில் கொட்டகை அமைத்து கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சரக்கு ஆட்டோ மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே காலிமனையில் கொட்டகை அமைத்து கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சரக்கு ஆட்டோ மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை புறநகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை விளார் சாலையில் ஒரு காலி மனையில் சிறிய கொட்டகை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கொட்டகைக்குள் சிறிய மூட்டைகள் எடுத்துச்செல்வதை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த கொட்டகையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

9¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேலும் அங்கு நின்று கொண்டு இருந்த சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 27 மூட்டைகளில் 1,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றையும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கொட்டகையில் 50 கிலோ எடை கொண்ட 160 மூட்டைகளில் 8 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 9 ஆயிரத்து 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சை விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்த துரைராஜ் (வயது 58), அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (23), மனோகரன் மகன் முரளிதரன் (24), சரக்கு ஆட்டோ டிரைவரான தஞ்சை கீழவாசல் பழைய மாரியம்மன்கோவில் சாலையை சேர்ந்த சகாய மாரியப்பன் மகன் மகாராஜா (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த முன்னா முகமது, தஞ்சையை சேர்ந்த காஜாமொய்தீன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

கள்ளச்சந்தையில் விற்பனை

இவர்கள் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.


Next Story