கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சரக்கு வேனுடன் பறிமுதல்


கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி சரக்கு வேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

அஞ்செட்டி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசியை, சரக்கு வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி - பெங்களூரு சாலையில் உடும்பரணி அருகில் நேற்று முன்தினம் அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அதை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை அளவு கொண்ட 30 மூட்டைகளில் மொத்தம் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து அந்த வேனை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவரது பெயர் அபுசார் (வயது 20), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ஹீஸ்னஅள்ளியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் அவர் என தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சுற்றி உள்ள மலை கிராமங்களாக உரிகம், கோட்டையூர், அஞ்செட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதை கர்நாடகாவில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரிய வந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து அபுசாரை கைது செய்த போலீசார், 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ரார்நகர் கனகபுராவை சேர்ந்த பர்கத், சந்துரு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story