தருமபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் விரைவில் கிடைக்கும்-கலெக்டர் சாந்தி தகவல்
பாப்பாரப்பட்டி,:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் விரைவில் கிடைக்கும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
கருத்தரங்கம்-கண்காட்சி
தர்மபுரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை சார்பில் உலக உணவு தினத்தையொட்டி உயர்தர உள்ளூர் விவசாய பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கருத்தரங்கம், கண்காட்சி பாப்பாரப்பட்டியில் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் ரக விதைகள், பயிர்கள், 100-க்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், மஞ்சள்-வெள்ளை ராகி மற்றும் சிறுதானியங்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பார்வையிட்டார். இதையடுத்து அவர் கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரக மேம்பாடு
தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விவசாயத்துக்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி, கருத்தரங்கம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கண்காட்சி, கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
விவசாயிகள் தங்களிடம் உள்ள உள்ளூர் பயிர் ரகங்களை காட்சிபடுத்துவதன் மூலம் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய ரகங்களை கண்டறிந்து, ரக மேம்பாடு செய்ய முடியும். பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும் சக்தி கொண்டது. இவற்றுக்கு உரங்கள் தேவை இல்லை. பூச்சி, நோய் தாக்குதல் குறைவு. மேலும் தனித்தன்மையான சுவைகொண்டது.
மானிய விலை
தரமான மகசூல் கிடைப்பதால், அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். மருத்துவ குணம் உள்ளதால் தற்போது பாரம்பரிய ரகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவற்றை மதிப்பு கூட்டுவதன் மூலம் வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பாரம்பரிய ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை கிடங்கிலேயே மானிய விலையில் பாரம்பரிய நெல் வகைகள் இந்த ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
ரேஷன் கடைகளில்சிறுதானியம்
தற்போது தர்மபுரி மாவட்டம் சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ராகி உள்ளிட்ட சிறுதானியங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சிறுதானியம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன், வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன், பாப்பரப்பட்டி வோளண் அறிவியல் நிலைய தலைவர் வெண்ணிலா, பேராசிரியர்கள் வித்யா, தங்கதுரை, தெய்வமணி, அருண், சிவக்குமார், உதவிசெயற் பொறியாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பென்னாகரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணி நன்றிகூறினார்.