இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்
உப்பூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தில்லைவிளாகம்:
உப்பூர் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்
முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை மூலம் அந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ரேஷன் கடை கட்டிடம் எந்தவித பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
பொதுமக்கள் அச்சம்
எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் ரேஷன் கடை கட்டிடம் காணப்படுகிறது. இதன்காரணமாக இந்த கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து இந்த கட்டிடத்திற்கு எதிரே உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில் தற்போது தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
புதிதாக கட்டித்தர வேண்டும்
இங்கு போதுமான வசதி இல்லாததால் உணவு பொருட்களை வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து அபாய நிலையில் காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் மீண்டும் புதிதாக கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.