ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்; தென்னை விவசாயிகள் கோரிக்கை
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விவசாயி ஹரிஹரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். விவசாயிகள் நாராயணசாமி, வீரமணி, ஜெயக்குமார், பால்ராஜ், ராமராஜ், தர்மர் ஆகியோர் கலந்துகொண்டு தென்னை விவசாயிகளின் நிலை குறித்து பேசினர். இதில், சிறப்பு விருந்தினராக 'நாம்' இயக்கத்தின் மாநில தலைவர் பிரபுராஜா கலந்துகொண்டார். அப்போது அவர், தென்னை விவசாயிகளின் கஷ்டங்களையும், தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
இந்த கூட்டத்தில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும், கொப்பரை தேங்காய்களை மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான (ஒரு கிலோ) ரூ.105.90-ல் இருந்து ரூ.130-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையிலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன் காட்சிக்கண்ணன் நன்றி கூறினார்.