ரேஷன் கடைகளில் விரைவில் கேழ்வரகு விற்பனை; உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


ரேஷன் கடைகளில் விரைவில் கேழ்வரகு விற்பனை; உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 2 May 2023 2:30 AM IST (Updated: 2 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் விரைவில் ராகி விற்பனை செய்யப்படும் என்று தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல்

ரேஷன் கடைகளில் விரைவில் ராகி விற்பனை செய்யப்படும் என்று தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடைக்கானலில் ஆய்வு

தமிழக உணவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று கொடைக்கானலுக்கு வந்தார். அப்போது கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் திடீரென்று ஆய்வு செய்தார். அதேபோல் சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட கிட்டங்கியயைும் அவர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த தொழிலாளர்களுக்கு அவர் மே தின வாழ்த்துகளை கூறினார். மேலும் அவர்களுடன் சேர்ந்து தேனீர் அருந்தினார். இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா, தாசில்தார்கள் முத்துராமன், சரவணகுமார் உடனிருந்தனர்.

பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ஆண்டு 35.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.14 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். இதற்காக 4.41 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 882 கோடி பணபட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 140 கோடி நிலுவைத்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 13 ஆயிரத்து 442 கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 வகையான கடன்கள் 82 லட்சத்து 15 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராகி விற்பனை

இந்த ஆண்டு, உலக நாடுகள் சார்பில் சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விற்பனை விரைவில் மேற்கொள்ளப்படும். அத்துடன் கம்பு, சோளம் ஆகியவை அதிக அளவு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவையும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும். பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழகத்தை சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.1,500 கோடி கால்நடை கடனாக வழங்கப்பட உள்ளது. முதியோர்களுக்காக பல்வேறு கடன் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 584 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 5 ஆயிரம் கடைகள் புதுப்பிக்கப்படும். வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில், 2 ஆயிரம் கடைகளுக்கு இந்த ஆண்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ரேஷன் கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கிட்டங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 30 சதவீத சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story