கூட்டு குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு
கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் கூட்டுக்குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு. சீரமைக்க அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் கூட்டுக்குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு. சீரமைக்க அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டு குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாமியம் கிராமம் உள்ளது . இந்த கிராமத்துக்கு கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.நீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் மூலம் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் பழைய பாளையம், கோதண்டபுரம் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நீர்த்தேக்க தொட்டி
அங்கிருந்து தண்ணீர் மீண்டும் மின்மோட்டார்கள் மூலம் எடுக்கப்பட்டு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கப்பட்டு, கொள்ளிடம் ஊராட்சிகளை சேர்ந்த கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாமியம் கிராமத்தில் பூமிக்கு அடியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி வீணானது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழாயை சரி செய்து தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக செல்லும்படி செய்தனர்.
மீண்டும் உடைப்பு
குழாய் சரி செய்யப்பட்ட ஒரே மாதத்தில் மீண்டும் அதே பகுதியில் பூமிக்கு அடியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாய் வழியாக அதிக அளவு தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடியது. காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் அதிகமான தண்ணீர் வெளியாகி வீணாவதால் பல கிராமங்களுக்கு உரிய அளவிலான தண்ணீர் சென்று சேர முடியாமல் குடிநீர் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே தொடர்ந்து தண்ணீர் வீணாகி கொண்டிருப்பதை நிறுத்தும் வகையில் பூமிக்கு அடியில் உடைப்பு ஏற்பட்ட குழாயை அகற்றிவிட்டு புதிய தரமான குழாயை புதைத்து குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.