படகு அணையும் தளம் அருகே கான்கிரீட் தளத்தில் மீண்டும் உடைப்பு
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் அருகே கான்கிரீட் தளம் மீண்டும் உடைந்துள்ளது. இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் அருகே கான்கிரீட் தளம் மீண்டும் உடைந்துள்ளது. இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம்உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் இத்துறைமுக வளாகத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துறைமுகத்தில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் படகில் மீன்களுடன் வந்து படகை நிறுத்திவிட்டு படகு அணையும் தளத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் மீன்களை கொட்டி தரம் பிரித்து பின்னர் மீன் விற்பனை கூடத்துக்கு எடுத்துக்சென்று விற்பனை செய்து வருகின்றனர். பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் இந்த தளத்திலேயே கொட்டப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.
மூன்றாவது இடத்தில்..
படகு நிறுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து துறைமுக பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் தளம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த கான்கிரீட் தளம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு இடங்களில் உடைந்து விழுந்தது. இதனால் படகு அணையும் தளத்தை ஒட்டி தண்ணீரில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளுக்கு செல்பவர்களும், படகை விட்டு இறங்கி வருபவர்கள், மீன் வியாபாரிகள்,மீன் வாங்க வருபவர்கள் உள்ளிட்ட அனைவரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இருந்து வருகின்ற கான்கிரீட் தளத்தில் மூன்றாவது இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. படகு அணையும் தளத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த கான்கிரீட் தளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த நேரத்தில் யாரும் அந்த பகுதியில் நடந்து செல்லாததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில் இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்க இருக்கிறது. அந்தப் பணியை விரைந்து தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.