தரைக்கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு
தரைக்கடைகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது
துறையூர், ஜூலை.6-
திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சிக்கு உட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியில் இருந்து மேற்கூரை அமைத்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் தினமும் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு முறை உரிய காலத்தில் மின் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தாததால், தரைக்கடை வியாபாரிகளும், பொதுமக்களும் சிரமமடைந்தனர். இந் நிலையில் நகராட்சி நிர்வாகம் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் நேற்று முன்தினம் காலை மின்வாரிய பணியாளர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் மாலையில் இருள்சூழ்ந்த பின்னர் பெரும்பாலான வியாபாரிகள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் வியாபாரம் செய்தனர். இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது பற்றி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தியது. இதைத்தொடர்ந்து மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால், மின் விளக்கொளியில் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் தரைக்கடை வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.