தரமற்ற பொருட்களை தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் ஒப்பந்தமா? - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் மற்றும் பருப்பு விநியோகிக்க அனுமதி வழங்கிய திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல வாக்குறுதிகள், தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை பேசப்பட்ட 'நீட் தேர்வு ரத்து', 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்', 'கல்விக் கடன் ரத்து' உள்ளிட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டாலும், தி.மு.க. தலைவரால் மேடைக்கு மேடை முழங்கப்பட்ட மூன்று 'C'-க்கள் Collection, Commission, Corruption ஆகியவை மட்டும் தமிழ்நாட்டில் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பலவற்றை சுட்டிக்காட்டலாம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 2022 ஆம் ஆண்டு சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு.
2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுகுறித்து, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நடுநிலையாளர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக சார்பில் நானும் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தேன்.
அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வர ஆரம்பித்ததும், இது குறித்து ஓர் ஆய்வுக் கூட்டம் 21-01-2022 அன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான ஆய்விற்குப் பின்னர், தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதாக அரசு செய்திக் குறிப்பு எண். 149 நாள் 21-01-2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை எந்த நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தகவல் இல்லை. இந்த வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். இதிலிருந்தே தரமற்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் காரணம் என்பது தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்தது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட அதே மூன்று நிறுவனங்களுக்கு, அதாவது Arunachala Impex, Integrated Service Point and Natural Food Commercials OM நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்காக 4 கோடி 'ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்' விநியோகிப்பதற்கும், ஒரு இலட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தரமற்ற பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் தி.மு.க: அரசு ஈடுபட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதற்கு பதிலளித்து உணவுத் துறை அமைச்சர் அவர்கள் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். அரசாங்கம் சொல்வதை செய்யக்கூடியவர்கள் அரசு அதிகாரிகள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் தானே தவிர வேறொன்றுமில்லை. அதேபோல், ஐந்து நிறுவனங்களிடமிருந்து 7.04 கோடி ரூபாய் அபராதம் என்பதும் இலாபத்தில் நட்டம் என்பது போலத்தான் உள்ளது. உண்மையிலேயே இந்த அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்குமானால் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியபடி மேற்படி நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஏன் சேர்க்கவில்லை? தயக்கம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்கு பயம்? என்ன
மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். ஒரு குற்றச்சாட்டிற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓர் அரசு ஊழியரை, அதைவிட உயர் பதவியில் அமர்த்தலாம் என்பதுபோல் அமைச்சரின் கூற்று உள்ளது. பொங்கல் பரிசில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதன் காரணமாக மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையெல்லாம் மறந்து அமைச்சர் இதுபோன்ற அறிக்கையை விடுவது மக்களுடைய உயிருடன் விளையாடுவதற்கு சமம். அமைச்சருடைய கூற்றிலிருந்து, தவறிழைத்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து கொள்முதல் ஆணை வழங்க வேண்டும் என்பதற்காகவே, கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் அபராதத்தை மட்டும் அரசு விதித்ததோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கேற்ப அமைச்சரின் அறிக்கை அமைந்துள்ளது.
தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததோடு, அந்த நிறுவனங்களுக்கு புதிதாக ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்திப் பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று. இதுபோன்ற நடவடிக்கை தரமற்ற பொருட்கள் விநியோகிக்கபடுவதை ஊக்குவிப்பதற்கு சமம். ஒருவேளை, இதுபோன்ற முறைகேடான, நியாயமற்ற, மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபடுவதுதான் 'திராவிட மாடல்' போலும்! ஊழலை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலுக்கு முன்பு, மேடைக்கு மேடை ஊழலைப் பற்றி பேசிய முதலமைச்சர் அவர்கள் இப்போது அது குறித்து பேசாதது, அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே, முதலமைச்சர் அவர்கள் இதற்குரிய விளக்கத்தினை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், தரமான பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும், மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.