பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
ஜோலார்பேட்டை நகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 34 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
ஜோலார்பேட்டை நகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 34 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
பணி நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக 93 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒப்பந்த முறையில் வேலைபார்த்து வந்த 34 துப்புரவு பணியாளர்கள் நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நகர மன்ற தலைவர், நகராட்சி ஆணையர், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் நகராட்சியில் வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் வேலை
இந்த நிலையில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர செயலாளர் ம.அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ்.பெரியார் தாசன் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணியாளர்களின் ஒப்பந்ததாரர் அருள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால், கே.பி.மணி, துப்புரவு பணியாளர் சங்க தலைவர் நாகலட்சுமி, மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.