இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
x

இடைநின்ற மாணவர்கள் கலெக்டர் நடவடிக்கையால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா மற்றும் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பாராஞ்சி உட்கோட்ட வருவாய் ஆய்வாளர் குழந்தை தெரேசா மற்றும் சித்தேரி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் சித்தேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள இருளர் சமூகத்தை சேர்ந்த 5 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பள்ளி செல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களது பெற்றோர்களுடன் கலந்து பேசி கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி அறிவுரை வழங்கியதன் பேரில் இடைநின்ற 5 மாணவர்கள் சித்தேரி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அவர்கள் ஏற்கனவே படித்த வகுப்புகளிலும், இதுவரை பள்ளி செல்லாத ஒரு குழந்தை 3-ம் வகுப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல் பின்னாவரம் மற்றும் பள்ளூர் கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த 3 மாணவர்களும், வேகாமங்கலம் கிராமத்தை சேர்ந்த 2 மாணவர்களும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வருவாய் அலுவலர்கள் தெரிவித்தபோது, ''பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தாலோ அல்லது அது போன்று இருப்பது யாருக்காவது தெரியவந்தாலோ அரக்கோணம் உதவி கலெக்டர், அரக்கோணம் தாசில்தாரிடம் தெரிவிக்கலாம்'' என்றனர்.


Next Story