ஒப்பந்த தொழிலாளர்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
நெய்வேலியில் நாளை மறுநாள் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த ஒப்பந்த தொழிலாளர்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என என்.எல்.சி. அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விருத்தாசலம்:
நெய்வேலி என்.எல்.சி.யில் தற்காலிகமாக பணிபுரியும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பான நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் விருத்தாசலம் தாசில்தார் அந்தோணி ராஜ், என்.எல்.சி. அதிகாரிகள் உமா மகேஸ்வரன், சதீஷ்குமார், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராசு, சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி, துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்த அறிவிப்பு
இந்த கூட்டத்தில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு தகுந்தாற்போல பணி பெயர் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் எங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாக தரப்பில் அதிகாரம் அளிக்கக்கூடிய அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது.
அப்போது என்.எல்.சி. தரப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறுகையில்:-
கடந்த 13-ந் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏ.எல்.சி.யால் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் தொழிலாளர்கள் சங்கத்தினர் 15-ந்தேதி நடந்த பொது கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், நாளை மறுநாள் இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
முடிவு செய்யப்படும்
இது தொடர்பாக தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு ஏ.எல்.சி. சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவை பொருத்து வேலை நிறுத்தம் சம்மந்தமாக முடிவு செய்யப்படும் என்று ஜீவா ஒப்பந்த தொழிவாளர்கள் தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.