தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே கூடலூர் அருகே லோயர்கேம்பில் உள்ள முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்ல புதிய குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதற்காக கூடலூர் குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பணை பாதியளவு மட்டுமே கட்டப்பட்டு இருந்தது. மீதியுள்ள பகுதிகளில் தடுப்பனை மற்றும் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணிகளுக்காக ஆற்றில் தண்ணீர் திறப்பதை நிறுத்திவைத்துவிட்டு, பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துைறயினர் முடிவு செய்தனர். ஆனால் குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீரை நிறுத்திவைக்க முடியாது என்பதால், புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் மதகு வழியாக தண்ணீர் செல்லும் வகையில் ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வரப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக கடந்த 24-ந்தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பணை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்றது.
தற்போது அந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தடுப்பணை கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.