புத்தக திருவிழாவுக்கு அலை, அலையாக திரண்டு வந்த வாசகர்கள்


புத்தக திருவிழாவுக்கு அலை, அலையாக திரண்டு வந்த வாசகர்கள்
x

புத்தக திருவிழாவுக்கு அலை, அலையாக திரண்டு வந்த வாசகர்கள்

தஞ்சாவூர்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் நேற்று அலை, அலையாக வாசகர்கள் திரண்டனர். அவர்கள் தாங்கள் விரும்பிய புத்தங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

புத்தக திருவிழா

தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தகத்திருவிழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.

தினமும் காலை 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், அதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகளும், மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறுகிறது.

அலை, அலையாய் மக்கள்

நேற்று 10-வது நாளாக புத்தக திருவிழா நடைபெற்றது. நேற்று விடுமுறை நாள் என்பதாலும், இன்றுடன் புத்தக திருவிழா கடைசி நாள் என்பதாலும் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மக்கள் அலை, அலையாய் புத்தக திருவிழாவுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். மேலும் குடும்பம், குடும்பமாகவும் புத்தக கண்காட்சிக்கு வந்தனர்.

இதில் போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், சமையல் புத்தகங்கள், ஆன்மிக புத்தகங்கள், கோலம், மருத்துவ புத்தகங்கள், சமூக சிந்தனையுள்ள புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள் போன்றவற்றை வாசகர்கள் போட்டி, போட்டிக்கொண்டு வாங்கி சென்றனர். சிலர் அதிக அளவில் புத்தகங்களை வாங்கி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றனர்.

கலை நிகழ்ச்சிகள்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களையும், வினாடி-வினா, பொது அறிவு புத்தகங்களையும், நாவல்கள், சிறுகதை போன்ற புத்தகங்களையும் வாங்கி சென்றனர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் அவர்கள் புத்தகங்களை தேர்வு செய்து வாங்கிசென்றனர். போட்டித்தேர்வுகளுக்கான புத்தங்களையும் அதிக அளவில் பட்டதாரிகள் வாங்கி சென்றனர். நேற்று புத்தக திருவிழாவில் வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் இலக்கிய அரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணிவகளுக்கு நூல் அறிமுக போட்டிகள் நடைபெற்றது. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பட்டிமன்றம்

அதனைத்தொடர்ந்து நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் வரவேற்றார். இதில் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கனிந்த மனமே, நிறைந்த பணமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. திண்டுக்கல் லியோனி தலைமையில் இந்த பட்டிமன்றம் நடைபெற்றது.


Next Story