நூலகத்தில் தண்ணீர் புகுந்ததால் வாசகர்கள் தவிப்பு
நூலகத்தில் தண்ணீர் புகுந்ததால் வாசகர்கள் தவித்தனர்.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் புகுந்து தேங்கி நின்றது. இதேபோல் விராலிமலை பஸ் நிலையம் அருகே உள்ள கிளை நூலகத்திற்குள்ளும் மழை நீரானது புகுந்ததால் நூலகத்திற்குள் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாசகர்கள் நூலகத்திற்குள் சென்று அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் இந்த நூலகமானது அடிப்படை வசதிகள் இல்லாமலும், நூலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடப்பதாலும், தாழ்வான பகுதியாக இருப்பதாலும் வெளிப்புறத்தில் இருந்து வரும் மழைநீர் அனைத்தும் நூலக வளாகத்திற்குள் சென்று விடுகிறது. ஒவ்வொரு முறையும் மழைநீர் உள்ளே வந்த பிறகு சில தன்னார்வலர்களின் உதவியுடன் அலுவலர்கள் மழை நீரை அகற்றி வருகின்றனர். இதேபோல் நேற்று நூலகத்திற்குள் புகுந்த மழை நீரையும் தன்னார்வலர்கள் சிலர் அகற்றினர். மேலும் நூலகத்தின் இரு புறங்களிலும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் உள்ளதால் தூர்நாற்றம் வீசுவதால் நூலகத்தின் உள்ளே வாசகர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலையும் உள்ளது. எனவே நூலகத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.