விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி


விஜயதசமியையொட்டி    திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

விஜயதசமி

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமிகோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். விஜயதசமி விழாவையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நாளில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால், படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். விஜயதசமி அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பாகும்.

ஏடு படிக்கும் நிகழ்ச்சி

அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள்.

அதன்படி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியையொட்டி ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி ஹயக்ரீவருக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ஹயக்ரீவர் சன்னதியில் தேவநாதசுவாமி கோவில் சன்னதியில் இருந்து யோக நரசிம்மர் மற்றும் தேசிகர் எழுந்தருளி பிரசித்தி பெற்ற ரத்னாங்கி சேவை விமரிசையாக நடந்தது.

அ, ஆ, எழுதினர்

பின்னர் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை பெற்றோர்கள் கொட்டி வைத்திருந்தனர். இதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். இதுவே ஏடு படிக்கும் நிகழ்ச்சியாகும்.

தரிசனம்

இதற்காக ஏராளமானோர் காலை முதலே கோவிலில் குவிந்திருந்தனர். இது தவிர மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story