சாராயம் காய்ச்சுபவர்கள் திருந்தி வாழ நினைத்தால் உதவிகள் செய்ய தயார்-கலெக்டர்
சாராயம் காய்ச்சுபவர்கள் திருந்தி வாழ நினைத்தால் உதவிகள் செய்ய தயார் என்று அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
சாராயம் காய்ச்சுபவர்கள் திருந்தி வாழ நினைத்தால் உதவிகள் செய்ய தயார் என்று அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உதவி ஆணையர் கலால் குமரன், உதவி கலெக்டர் மந்தாகினி, டாஸ்மாக் மேலாளர் புஷ்பலதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-
நடவடிக்கை வேண்டும்
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 288 இடங்கள் விற்பனை செய்யப்பட்ட இடமாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை நாம் பறிமுதல் செய்ய வேண்டும்.
அதிக அளவிலான சாராயம் மற்றும் அது சார்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.
இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் இனி தொடர்ந்து நடைபெறும். ஏராளமானவர்கள் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்கின்றனர். கைது செய்வது மட்டும் நமது வேலை அல்ல. அதை பறிமுதலும் செய்ய வேண்டும். அதுவே நமக்கு சவாலான விஷயமாகும்.
கள்ளச்சாராயம் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் இது தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும். விற்பனை குறித்து தகவல் அறிந்தவுடன் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ய வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்களுக்கு கடன் உதவி, கால்நடைகள் வழங்குதல், பெட்டிக்கடைகள் வைத்தல் போன்ற அவர்களது வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்.
திருந்தியவர்கள் கூட மீண்டும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
குண்டர் சட்டம்
குட்கா, போதை பொருட்கள் தொடர்பான சோதனை போன்று கள்ளச்சாராயம் தொடர்பாகவும் அடிக்கடி சோதனை செய்தல் வேண்டும். சாராயம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு பயம் ஏற்பட வேண்டும். ஏனென்றால் சாராய விற்பனையை பலர் சாதாரணமாக நினைத்து குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். சாராயம் விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
அனைத்து தரப்பிற்கும் இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.