வடமாநில தொழிலாளர்களுக்கு உதவ தயார்
நீலகிரியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவ தயார் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு உதவ தயார் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார்.
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ பரவியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், பீகார் மாநில அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு வந்தது. அந்த குழுவினர் ஆய்வு செய்து, தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து தைரியமாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நேற்று ஊட்டி மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீஸ் உதவ தயார்
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக சமூக விரோதிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். அமைதியாக வேலை பார்த்து வரும் தொழிலாளர்களான நீங்கள் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் பரவி வருவது வதந்தி என உங்களது கும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். யாருக்காவது ஏதேனும் பிரச்சினை என்றால் 24 மணி நேரமும் எங்களின் உதவியை நாடலாம். இதற்காக தனிப்பிரிவு கட்டுப்பாடு அறை எண்களும் பயன்பாட்டில் உள்ளன.
கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ள நீங்கள் வழக்கம் போல விடுமுறை தினங்களில் ஊட்டி மார்க்கெட்டுக்கு வந்து தேவையான பொருட்களை தைரியமாக வாங்கி செல்லலாம். 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு டீ பரிமாறினார். போலீஸ் தரப்பில் நேரில் வந்து சந்தித்து உரையாடுவது நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கிறது என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் உள்பட பலர் இருந்தனர்.