தளி அருகே பணம் கொடுக்கல்- வாங்கலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டாரா?பரபரப்பு தகவல்கள்
தேன்கனிக்கோட்டை
தளி அருகே பணம் கொடுக்கல்-வாங்கலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், செங்கல் சூளையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தேன்கனிக்கோட்டை தாலுகா என்.கொத்தூர் கிராமத்தில் மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் கேசவனை வழிமறித்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் கொடுக்கல்-வாங்கல்
போலீசாரின் விசாரணையில் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கேசவன் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலருக்கு பணம் கொடுத்துள்ளார். அந்த பண விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பஜ்ஜேப்பள்ளி, என்.கொத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பணம் வட்டிக்கு கொடுத்தத தெரிய வந்தது. கேசவனிடம் பணம் வாங்கி தற்போது யாரெல்லாம் தலைமறைவாக உள்ளார்கள். கொலை செய்யப்பட்ட கேசவன் யாரிடம் எல்லாம் கடைசியாக பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
தனிப்படை
மேலும் கொலை கும்பல் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்பதால் தனிப்படை போலீசார் அங்கும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இக்கொலை தொடர்பாக கேசவனின் சகோதரர் ராஜசேகர் தளி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் என்.கொத்தூர், பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த 2 பேர் தனது சகோதரர் கேசவனிடம் பணம் வாங்கி இருந்ததாகவும், அவர்கள் தனது சகோதரருடன் பிரச்சினை செய்து வந்ததாகவும் தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.