ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை
ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரண்ராஜ்(வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று உறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது பழைய நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சரண்ராஜும், அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் உறையூர் சாலை ரோட்டில் ஒரு டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் அமர்ந்து மது அருந்தினர்.
குத்திக்கொலை
பின்னர் நண்பர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட கைகலப்பில், சரண்ராஜை அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கினர். இதனை பார்த்த பார் ஊழியர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பாரில் இருந்து வெளியே வந்த சரண்ராஜை, அவரது நண்பர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தினர். இதில் ரத்தவெள்ளத்தில் சாலையில் விழுந்த சரண்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
4 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், காந்தி மார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி மற்றும் உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் உறையூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.