ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; நூதன போராட்டம் நடத்திய பெண்கள்
செங்கோட்டை அருகே கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். அப்போது பெண்கள் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
செங்கோட்டை தாலுகா வடகரை கீழ்பிடாகை பகுதியில் இருந்த பஸ்நிறுத்தமானது பாழடைந்து பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாகவும், மேலும் பஸ்நிறுத்தத்தை சுற்றியுள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு புதிய பஸ்நிறுத்தம் கட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் வாவா மைதீன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை எனக்கூறி வாவா மைதீன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து, 4 நாட்களில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, ஆக்கிரமிப்பு நிலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக ஒரு சிறிய கோவில் கட்டி அப்பகுதியை சேர்ந்த மக்கள் தரிசனம் செய்து வரும் சூழலில், பஸ்நிறுத்தத்துக்கு தேவைப்படும் இடமோ ஒரு சென்ட் தான். ஆனால் அதை மட்டும் எடுத்துவிட்டு பாரம்பரியமாக தாங்கள் வணங்கி வரும் கோவிலை அப்படியே விட்டு விடும்படி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது ஏராளமான பெண்கள் ஒன்று கூடி கோவிலில் பூஜை செய்து நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.