பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம்


பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம்
x
தினத்தந்தி 13 July 2023 11:34 PM IST (Updated: 14 July 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2½ லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம், ஆண்டிற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன்பெற முடியும்.

அங்கீகாரம்

மேலும் குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், முதியோர் ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் ஆகிய நபர்கள் தகுதி இல்லாதாவர்கள் ஆவர்.

இந்த திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

எனவே மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியாக உள்ள அனைத்து மகளிர்களுக்கும் குறித்த காலத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, அனைத்து தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story