ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரை
ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகா்கோவில்:
ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பு குழு கூட்டம்
குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், வன அதிகாரி இளையராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ கூறுகையில், குமரி மாவட்டத்தில் வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை. இதனால் விவசாயம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் நமது மாவட்டத்தில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்காததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது.
விதை நெல் தட்டுப்பாடு
2021-ம் ஆண்டு குளங்களில் ஏற்பட்ட உடைப்பில் சாக்கு மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் அந்த உடைப்பு ஏற்பட்ட இடத்தை நிரந்தரமாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு தற்போது திருப்பதிசாரம் டி.பி.எஸ். விதைநெல் தேவைப்படுகிறது. ஆனால் நமது மாவட்டத்தில் டி.பி.எஸ். விதை ரக நெல் இல்லாத நிலை உள்ளது. குமாி மாவட்டத்தில் தற்போது பெய்த கனமழைக்கு ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதிகாரிகள் கலெக்டருக்கு தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்கள். அறுவடை செய்யும் விவசாயிகள் நெற்பயிர்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி அதிகாரிகள் நெற்பயிர்களை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் வயிற்றில் அதிகாரிகள் அடிக்கக் கூடாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்வாங்கப்பட்டு வருகிறது என்றார்.
பேரிடர் மாவட்டமாக அறிவிக்க...
விஜயதரணி எம்.எல்.ஏ. பேசுகையில், ஆற்றூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், ரேஷன் கடையில் ஒரு நபர் கார்டுக்கு அரிசி வழங்கப்படுகிறதா?. ரேஷன் கடைகளில் கைரேகை பதியாதவர்களுக்கு கடிதம் எழுதி வாங்கிவிட்டு பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் நமது மாவட்டத்தில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த பெண்கள் பலர் உரிமைத் தொகை பெற்றுள்ளனர். எனவே இந்த திட்டம் தகுதியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்றார்.
பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், குமரி மாவட்டத்தில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். வனப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார்.
250 மி.மீ. மழை
இதற்கு அதிகாரிகள் பதிலளித்து கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தங்கு தடை இன்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருப்பதிசாரம்- 3 (டி.பி.எஸ்) ரக விதை நெல் இருப்பு இல்லை.
மழை வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பை கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 250 மில்லி மீட்டர் மழை சராசரியாக பதிவாகி உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது இதுவரை 18 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஈரப்பதம் அதிகமாக உள்ள நெல்லை வாங்க வேண்டும் என்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கார்டுகளில் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்பட்டு தகுதியுள்ளவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் 22,438 பேர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிதாக நபர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ரேஷன்கடைகளில் தொழிலாளர்களின் கைரேகை பதிவதில் சிக்கல் உள்ளது. இனிவரும் காலங்களில் கண் விழி மூலமாக பொருட்கள் வழங்க தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பொதுமக்கள் மறுபடியும் விண்ணப்பித்து வருகிறார்கள். தகுதியான நபர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் உடைப்பு ஏற்பட்ட குளங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.