அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலம் மீட்பு


அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை அதிகாரிகள் மீட்டு முள்வேலி அமைத்தனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை அதிகாரிகள் மீட்டு முள்வேலி அமைத்தனர்.

முள்வேலி அகற்றம்

நித்திரவிளை அருகே உள்ள ஏழுதேசம் 'சி' வில்லேஜில் மாம்பழஞ்சியில் அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி முள்வேலி அமைக்க சில நாட்களுக்கு முன்பு கிள்ளியூர் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது அந்த இடம் தூத்தூர் பங்கு நிர்வாகத்தினருக்கு சொந்தமான நிலம் என்று கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வருவாய்த்துறையினர் போட்டிருந்த முள் வேலிகளை அகற்றினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, பைங்குளம் வருவாய் ஆய்வாளர் ஆல்பர்ட் லினோ, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசாருடன் அரசு நிலத்தில் முள்வேலி அமைக்க மாம்பழஞ்சி பகுதிக்கு வந்தனர்.

பங்கு நிர்வாகத்தினர் எதிர்ப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்தூர் பங்கு நிர்வாகத்தினர் அங்கு வந்து மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் தூத்தூர் பங்குதந்தை மற்றும் பங்கு நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பங்கு நிர்வாகத்தினர் ''தூத்தூர் பங்கிற்கு சொந்தமான நிலம் இந்த பகுதியில் உள்ளது. அதனை அளந்து முறைப்படுத்த வேண்டும். அதுவரை முள்வேலி அமைக்க கூடாது'' என்றனர்.

அவர்களிடம் தாசில்தார் அனிதா குமாரி, ''முதலில் அரசுக்கு சொந்தமான நிலத்தை அளந்து முள்வேலி அமைப்போம். பின்னர் தூத்தூர் பங்கிற்கு சொந்தமான நிலத்தை அளந்து அதில் ஏதாவது மாறுதல் இருந்தால் மாற்றம் செய்ய முன்வரலாம்'' என கூறினார்.

நிலம் மீட்பு

இதையடுத்து பங்கு நிர்வாகத்தினர் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து வருவாய் துறையினர் அரசுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை மீட்டு சுற்றிலும் முள்வேலி அமைத்து கையகப்படுத்தினர். இதைெயாட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story