ஆக்கிரமிப்பில் இருந்த 4 குளங்கள் மீட்பு


ஆக்கிரமிப்பில் இருந்த 4 குளங்கள் மீட்பு
x

தஞ்சை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 4 குளங்கள் மீட்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக தூர்வாரும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராராமுத்திரைக்கோட்டை, தளவாய்பாளையம், செண்பகாம்பாள் புரம் ஆகிய இடங்களில் 4 குளங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்து இருந்ததாகவும், அந்த குளங்களை மீட்டு தூர்வார வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். உடனே அவர், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, 4 குளங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தனியார் வசம் இருந்த 4 குளங்களையும் மீட்டார்.

தூர்வாரும் பணி

ராராமுத்திரைக்கோட்டையில் உள்ள குளம் 2½ ஏக்கர் பரப்பளவு கொண்டவையாகும். தளவாய்பாளையத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 2 குளங்களில் ஒரு குளம் 3 ஏக்கரும், மற்றொரு குளம் 1¼ ஏக்கரும் பரப்பளவு கொண்டவையாகும். செண்பகாம்பாள்புரத்தில் உள்ள 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் 5 ஏக்கர் தனியார் வசம் இருந்தது. இவைகளும் மீட்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிதாக குளம் அமைப்பதற்காக தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி குளம் தூர்வாரும் பணியை ராராமுத்திரைக்கோட்டையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். பொக்லின் எந்திரம் மூலம் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல் தளவாய்பாளையத்தில் மீட்கப்பட்ட குளங்களை நேரில் பார்வையிட்ட கலெக்டர், உடனடியாக குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வருவாய்த்துறையினரை அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.





Next Story