மருந்து வழங்குவதாக கூறி மோசடி: அரசு டாக்டர் இழந்த ரூ.1 லட்சம் மீட்பு
மருந்து வழங்குவதாக கூறி அரசு டாக்டரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகணபதி, அரசு டாக்டர். கொரோனா தீவிரம் அடைந்த கால கட்டத்தில் 'ரெம்டெசிவர்' மருந்து வாங்குவதற்காக நண்பர் மூலம் திருச்சியில் ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறிய ரஞ்சித் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு மருந்து கேட்டு உள்ளார். அதற்கு அவர் வங்கி கணக்கில் பணம் அனுப்பினால், தேவையான மருந்து அனுப்புவதாக கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 2021-ம் ஆண்டு ரஞ்சித்தின் வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 அனுப்பி உள்ளார். ஆனால் மருந்து வரவில்லை. சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை. இதனால் பணம் மோசடி நடந்தது தெரிந்தது. இது குறித்து ராஜகணபதி சேலம் சைபர் கிரைம் போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500-ஐ டாக்டர் ராஜகணபதி வங்கி கணக்கில் சேர்த்தனர். தொடர்ந்து மோசடி செய்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.