தனியார் மருத்துவமனை ஊழியர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு


தனியார் மருத்துவமனை ஊழியர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு
x

ஆன்லைனில் தனியார் மருத்துவமனை ஊழியர் இழந்த ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி சி.எம்.சி. காலனி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீமா (வயது 36). இவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். ஹீமாவின் செல்போன் எண்ணிற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பான்கார்டு புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை உண்மை என்று நம்பிய அவர் அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து வங்கி தொடர்பான விவரங்களை பதிவிட்டுள்ளார்.

சிறிதுநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிந்து ஹீமாவின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கை முடக்கினர். பின்னர் அவற்றில் இருந்து ரூ.2 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் நேற்று ஹீமாவிடம் ரூ.2 லட்சத்தை ஒப்படைத்தார். பின்னர் அவர் கூறுகையில், செல்போன் எண்ணிற்கு வரும் அழைப்புகள், குறுந்தகவல், இணைப்பு உள்ளிட்டவற்றை நம்பி வங்கி விவரங்களை தெரிவிக்க கூடாது. ஆன்லைனில் வரும் போலியான வேலை வாய்ப்பு விவரங்களை நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.


Next Story