வங்கி கணக்கில் இருந்து வியாபாரி இழந்த ரூ.2½ லட்சம் மீட்பு- சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை


வங்கி கணக்கில் இருந்து வியாபாரி இழந்த ரூ.2½ லட்சம் மீட்பு- சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
x

வங்கி கணக்கில் இருந்து சேலம் பூ வியாபாரி இழந்த ரூ.2½ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

சேலம்

பூ வியாபாரி

சேலம் அய்யந்திருமாளிகையை சேர்ந்தவர் ராஜ கணேஷ் (வயது 53), பூ வியாபாரி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், உங்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனை புதுப்பிக்க கீழே கொடுத்துள்ள லிங்கில் தகவல்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அந்த லிங்கில் ராஜகணேஷ் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

ரூ.2.64 லட்சம் மீட்பு

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ரூ.24 ஆயிரத்து 999 மேற்கு வங்காளத்தில் உள்ள தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டிருப்பதும், மீதம் உள்ள ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 539 ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிறுவனத்தை சைபர் கிரைம் போலீசார் தொடர்பு கொண்டு அவை மோசடியாக பெற்ற பணம் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜகணேஷ் இழந்த ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்தை அவரது வங்கி கணக்கிற்கு மீண்டும் மாற்றப்பட்டது. இதுபோன்ற மோசடி லிங்குகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏமாந்தால் உடனடியாக சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story