மோசடி செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மீட்பு
இணையதளம் மூலம் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் லட்சத்தை போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 45). இவரிடம், இணையதளம் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஆனந்தியும் கடன் பெற சம்மதித்தார். இதற்காக ஆனந்தியின் ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்களை கேட்டறிந்த அந்த நபர், கடன் வழங்குவதற்கான ஆவண செலவுக்காக ரூ.2 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தும்படி கூறினார். அதன்படி ஆனந்தியும் பணத்தை அவர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அந்த நபரை ஆனந்தியால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போது தான் அந்த நபர் கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்தது ஆனந்திக்கு தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் இதுகுறித்து அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்தியை மோசடி செய்தது குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய வங்கி கணக்கை முடக்கிய போலீசார், அதில் இருந்து ஆனந்தி செலுத்திய ரூ.2 லட்சத்தை மீட்டனர். இந்த நிலையில் அந்த தொகையை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆனந்தியிடம் நேற்று வழங்கினார்.