கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு
தஞ்சை அருகே உள்ள கத்தரிநத்தம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள விலை நிலங்கள் மீட்கப்பட்டன.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது கத்தரிநத்தம் ஊராட்சி. இந்த கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு சொந்தமாக 56.61 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்க அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அதன்படி நேற்று ஆக்கிரமிப்பில் இருந்த 56.61 ஏக்கர் நிலங்களும் மீட்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர், கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இடம் மீட்கப்பட்டது.
மேலும் மீட்கப்பட்ட இடத்தில் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.