காமராஜர் பல்கலைக்கழகத்தில் திருட்டு போன விடைத்தாள் கட்டுகள் காகித குடோனில் மீட்பு


காமராஜர் பல்கலைக்கழகத்தில் திருட்டு போன விடைத்தாள் கட்டுகள் காகித குடோனில் மீட்பு
x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திருட்டு போன விடைத்தாள் கட்டுகளை பல இடங்களில் தேடி பழைய காகித குடோனில் இருந்து மீட்டனர். இதற்கு காரணம் யார்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

மதுரை


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திருட்டு போன விடைத்தாள் கட்டுகளை பல இடங்களில் தேடி பழைய காகித குடோனில் இருந்து மீட்டனர். இதற்கு காரணம் யார்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

விடைத்தாள் கட்டுகள் மாயம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைெபற வேண்டிய இறுதித்தேர்வு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடந்தது.

மாணவ, மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தொலைநிலைக்கல்வியின் கூடுதல் தேர்வாணையரின் அலுவலக கண்காணிப்பாளர் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்ற போது, விடைத்தாள் கட்டுகள் சிதறிகிடந்துள்ளன.

உடனடியாக, துணைவேந்தர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்த போது, சில விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து, பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரணை நடத்திய போது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்த்தவர்கள் இந்த விடைத்தாள்களை திருடி சென்றதாக கூறப்பட்டது.

போலீசில் புகார்

இதுதொடர்பாக பதிவாளர் அலுவலகம் சார்பில் நாகமலை போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமாரிடம் கேட்ட போது, விடைத்தாள் திருட்டா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றார். ஆனால், நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக பதிவாளர் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையை தொடங்குவதற்கு முன்னதாகவே விடைத்தாள் கட்டுகள் பல்கலைக்கழக பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளன. அதாவது, பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்த்தவர்கள் விடைத்தாள்களை எடுத்து சென்றதாக சொல்லப்பட்டதை தொடர்ந்து, அவர்களிடம் பல்கலைக்கழக பணியாளர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் தேடி மீட்பு

அதில், ராஜம்பாடியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்களை எடைக்கு போட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், அங்கு சென்ற போது, அனைத்து பேப்பர் கட்டுகளும் ஆலம்பட்டியில் உள்ள ஒரு கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்கள்.

ஆலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடைக்கு சென்ற போது அங்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அங்கிருந்து மதுரை விரகனூர் பகுதியில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு விடைத்தாள் கட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து பல்கலைக்கழக பணியாளர்கள் விரகனூர் சென்று, அங்கிருந்த விடைத்தாள்களை மீட்டு பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருப்பதால், துணைவேந்தர் இதனை முழுமையாக நம்பவில்லை. எனவே, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் தான், சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் குறித்த விபரம் தெரியவரும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கருதுகிறது.

இதேபோல, கடந்த வருடம் பல்கலைக்கழக பஸ்சில் விடைத்தாள்களை மதிப்பீட்டுக்காக கொண்டு சென்ற போது விடைத்தாள்கள் மாயமானது குறிப்பிடத்தக்கது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. உயர்கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Related Tags :
Next Story