தஞ்சை அருகே ரூ.111 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு


தஞ்சை அருகே ரூ.111 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
x

தஞ்சாவூர், மே.18- தஞ்சை அருகே சூரக்கோட்டையில் உள்ள சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.111 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலத்தை 120 பேர் விளைநிலங்கள், வீட்டுமனைகளாக பயன்படுத்தினர்.

தஞ்சாவூர்


தஞ்சை அருகே சூரக்கோட்டையில் உள்ள சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.111 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலத்தை 120 பேர் விளைநிலங்கள், வீட்டுமனைகளாக பயன்படுத்தினர்.

சுத்த ரத்தினேஸ்வரர் கோவில்

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில், சுத்த ரத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் 134.10 ஏக்கர், நன்செய் நிலம் 13.73 ஏக்கர், கோவில் புறம்போக்கு 0.01 சென்ட் என மொத்தம் 147.84 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்த நிலத்தை 120 பேர் ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாகவும், வீட்டு மனையாகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இதை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி ஆக்கிரமிப்பாளர்களிடம் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு 78-ன் கீழ் தாங்களாகவே முன் வந்து கோவில் நிலங்களை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தனர்.

கோவில் நிலம் மீட்பு

இதனையடுத்து நேற்று தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்(பொறுப்பு) அனிதா தலைமையில், கோவில் நிலங்கள் தனி தாசில்தார் சங்கர் முன்னிலையில், கோவில் தக்கார் பிருந்தாதேவி, தஞ்சை சரக ஆய்வாளர் கீதாபாய் மற்றும் திருவையாறு ஆய்வாளர் குணசுந்தரி, சிறப்பு அலுவலர்கள் அசோக்குமார், ரவிச்சந்திரன், சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கோவில் நிலத்தை கையகப்படுத்தினர். மேலும் அந்த நிலத்தில் கோவில் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக விளம்பர பலகை வைத்தனர்.

ரூ.111 கோடி மதிப்பு

மீட்கப்பட்ட இடம் 147.84 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.111 கோடி ஆகும். விரைவில் மீட்கப்பட்ட இடங்கள் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படும். மேலும் இந்துசமய அறநிலையத்துறையின் இது போன்ற கோவில் நிலங்கள் மீட்டெடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story