'ரெட் அலர்ட்' எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
காலை 7.25 மணியளவில் விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் கல்வித்துறை சார்பில், பள்ளிகளுக்கு தகவல் கொடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் பள்ளியில் இருந்து அறிவிப்பு வரவில்லை என்று தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிக்கு வந்தனர். அதன்பிறகு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலையில் இருந்து இரவு வரை தேனியில் சாரல் மழை கூட பெய்யவில்லை. அதே நேரத்தில் வெயிலின் தாக்கத்தையும் உணர முடியவில்லை. சூரிய ஒளியே தெரியாத அளவுக்கு வானில் கார்மேகங்கள் சூழ்ந்து இருந்தன. நண்பகல் நேரத்திலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. பகலிலும் குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், மழை பெய்யாமல் ஏமாற்றியது.