முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22 திருத்திய பட்ஜெட்டில், முதியோர் ஓய்வூதியத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று பயனாளிகள் எதிர்பார்த்த நிலையில், 'முதியோர் ஓய்வூதிய திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்து தகுதிவாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன்பெறுவதை அரசு உறுதி செய்யும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் 1 லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி, ஏழை-எளிய, வருவாய் இல்லாத முதியவர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 'விடுதலின்றி பயன் பெறுவது' என்பதற்குப் பதிலாக, 'இருப்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்' என்ற பரிதாபகரமான நிலைதான் தற்போது நிலவுகிறது. அரசின் செலவினத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளை விதித்து, அதன் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தால் அது இயற்கை நியதிக்குப் புறம்பானது.
அவல நிலை ஏற்படும்
ஓய்வூதியம் கொடுக்கப்படுவதால்தான் முதியோர்களை அவர்களது பிள்ளைகள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நிலையில் முதியோர் பெறும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால், அவர்கள் எல்லாம் அனாதை இல்லங்களை நோக்கி செல்லக்கூடிய அவல நிலைமை ஏற்படும். இந்த 'மக்கள் விரோத மாடல்' என்பதைத்தான் 'திராவிட மாடல்' என்று தி.மு.க. சொல்கிறது போலும். வயதான ஏழை-எளிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்து பயனாளிகளும் தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் பெற வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.