வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு


வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.

தேனி

மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக கடந்த 30-ந்தேதி முதல் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 5 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது. அதன்படி வினாடிக்கு 700 கன அடி வீதம் ஆற்று படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கு ஏதுவாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிநீருக்காக திறக்கப்படும் வினாடிக்கு 72 கன அடி தண்ணீரை சேர்த்து மொத்தம் வினாடிக்கு 172 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 53.03 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story