பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு


பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பு
x

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள சேதங்கள் ஏற்படாத வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காத வகையில் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 42 அடியிலும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியிலும் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அணைகளின் நீர்மட்டம் ஏறத்தாழ இதே அளவுகளில் உள்ளன.

மழை சற்று தணிந்தது

மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் சற்று தணிந்து காணப்படுகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 நாட்களாக சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் அணைகளுக்கு உள்வரத்து நீரின் அளவு குறைந்து காணப்பட்டது.

இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 813 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கால்வாயில் வினாடிக்கு 122 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 625 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது.

அருவியில் குளிக்க தடை

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 486 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இதனால் அணையின் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

அதே சமயத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால் அருவியில் 13-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.


Next Story