முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு


முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 31 Aug 2023 1:00 AM IST (Updated: 31 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.

தேனி

குடிநீர் திட்டப்பணி

முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு 1,796 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்றது. இதற்காக லோயர்கேம்ப் அருகே குருவனூத்து பாலம் வண்ணான் துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.

அதில் தடுப்பணையின் ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆற்றின் மற்றொரு பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 3 கனஅடியாக இருந்தது.

மின் உற்பத்தி நிறுத்தம்

இதையடுத்து நேற்று காலை முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியில் இருந்து வினாடிக்கு 150 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்பட்டு உள்ளது. தற்போது இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


Next Story