உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் விதிகள் குறித்து புத்தாக்க பயிற்சி


உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் விதிகள் குறித்து புத்தாக்க பயிற்சி
x

செஸ் விதிகள் குறித்து புத்தாக்க பயிற்சி

ஈரோடு

அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் விதிகள் குறித்து புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

புத்தாக்க பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 44-வது செஸ் ஒலிம்பியாட்டினையொட்டி அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் விதிகள், ஆட்ட நுணுக்கங்கள் தொடர்பான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி செஸ் பயிற்சியினை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி, மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில், அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

உலக செஸ் போட்டி

இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி முதல் பள்ளிக்கூடம், வட்டாரம், கோட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவு, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவு, பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு ஒரு பிரிவு என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில், வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்பர். மாநில போட்டியில் வெற்றி பெறுவோர், தமிழகத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் பேச வாய்ப்பு வழங்கப்படும்' என்றனர்.

------------


Next Story