புதுப்பொலிவு பெறும் பொது கழிப்பிடங்கள்
கோத்தகிரி பேரூராட்சியில் வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓவியங்களுடன் பொது கழிப்பிடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதனை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சியில் வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓவியங்களுடன் பொது கழிப்பிடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதனை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
தத்ரூப ஓவியங்கள்
கோத்தகிரி பேரூராட்சி சார்பில், கோத்தகிரி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகரின் முக்கிய பகுதிகளில் மொத்தம் 10 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கழிப்பிடங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருவதுடன், கழிப்பிட சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகின்றன.
இதில் பெரும்பாலான கழிப்பிட சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டன. தொடர்ந்து மீதமுள்ள கழிப்பிடங்களிலும் ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புதுப்பொலிவு பெற்று உள்ளன. மேலும் வழக்கமாக பொது கழிப்பிடங்கள் என்றாலே, அருவருப்புடன் பார்க்கும் நிலை மாறி, வண்ண ஓவியங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வகையிலும், உரிய வசதிகள், பராமரிப்புடனும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
விரைந்து முடிக்க உத்தரவு
இதனால் பொதுமக்கள் தயக்கமின்றி கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது வெகுவாக குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா கோத்தகிரி பேரூராட்சியில் பொது கழிப்பிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா, சுத்தமாக உள்ளதா, தண்ணீர் வசதி இருக்கிறதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கழிப்பிடங்களில் ஓவியம் வரையும் பணி, நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, நுழைவுவாயில் அருகே டிக்கெட் கவுன்டர் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பூங்காவில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் உத்தரவிட்டார். ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.