குளிர்பதன பெட்டி வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப சாவு
சென்னை அருகே குளிர்பதன பெட்டி வெடித்து நேரிட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகி இருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவில் உள்ள ஆர்.ஆர். பிருந்தாவன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவர் வெங்கட்ராமன், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி கிரிஜா (வயது 63), வீட்டைப்பூட்டி விட்டு துபாயில் வசித்து வரும் மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், கணவரின் முதல் நினைவு நாள் 6-ந் தேதி (நாளை ஞாயிற்றுக்கிழமை) வருவதால், அதற்கு திதி கொடுப்பதற்காக கடந்த 2-ந் தேதி கிரிஜா, மகள் பார்கவி (35), உடன் பிறந்த தம்பியும் மருமகனுமான ராஜ்குமார் (45), பேத்தி ஆராதயா (6) ஆகியோருடன் துபாயில் இருந்து ஊரப்பாக்கம் வந்தார். வீட்டில் விட்டுவிட்டுச்சென்ற குளிர்பதனப்பெட்டி (பிரிட்ஜ்) போன்ற சாதனங்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
இரவில் தூக்கம்
இதற்கு மத்தியில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் வசிக்கும் கிரிஜாவின் தங்கை ராதா (55), மாமாவின் திதியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் அக்காள் கிரிஜாவின் வீட்டிற்கு வந்து தங்கினார்.
நேற்று முன்தினம் இரவு அனைவரும் ஒன்றாகப் பேசி, மறைந்த குடும்பத்தலைவர் வெங்கட்ராமன் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து கிரிஜாவின் மகள் பார்கவி, பேத்தி ஆராதயா ஆகிய இருவரும் ஒரு அறையிலும், வீட்டு ஹாலில் கிரிஜா, அவரது தங்கை ராதா, தம்பி ராஜ்குமார் ஆகிய 3 பேரும் அயர்ந்து தூங்கினர். அந்த இரவு, அவர்களுக்கு கொடிய இரவாக மாறப்போகும் அவலம் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
வெடித்தது 'பிரிட்ஜ்'
நேற்று காலை கிரிஜாவின் வீட்டில் இருந்து ஏதோ வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டுக்குள் அலறல் சத்தமும் கேட்டதால், பதற்றத்துடன் சுந்தர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றால், அங்கிருந்த 'பிரிட்ஜ்' வெடித்து, வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டிருந்தது.
அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்த அறையில் பார்த்தபோது கிரிஜாவின் மகள் பார்கவியும், அவரது பேத்தி ஆராதயாவும் மயங்கிக்கிடந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குள் கரும்புகை தொடர்ந்ததால், அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 பேர் பரிதாப சாவு
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புபடை வீரர்கள் 'பிரிட்ஜ்' வெடித்து புகை மண்டலமாக இருந்த வீடு முழுவதும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். அப்போதுதான் கரும்புகையை சுவாசித்து, கிரிஜா, அவரது தங்கை ராதா, அவரது தம்பி ராஜ்குமார் ஆகிய 3 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து கிடந்ததை கண்டு தெரிய வந்தது.
அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கிரிஜாவின் மகள் பார்கவியிடம் நடத்திய விசாரணையில் 'பிரிட்ஜ்' வெடித்து வீடு முழுவதும் புகை ஏற்பட்டபோது, தனது 7 வயது மகளுடன் மற்றொரு படுக்கை அறையில் சென்று கதவை சாத்திவிட்டு அலறியதால், அக்கம் பக்கத்தினர் வந்து கதவை உடைத்து தன்னையும், தன் குழந்தையும் காப்பாற்றியதாக தெரிவித்தார்.
கலெக்டர் நேரில் ஆய்வு
இதுபற்றி அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், அங்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கே கூடியிருந்த நிருபர்களிடம் அவர் பேசுகையில், " பிரிட்ஜ் வெடித்து அதிலிருந்து கேஸ் கசிந்து வீட்டிற்குள் பரவி ஏற்பட்ட கரும் புகையால் மூச்சு திணறி 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாத வீட்டை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்துவிட்டுத்தான், வீட்டையும், வீட்டில் உள்ள மின்சாதனங்களையும் பயன்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
சம்பவ இடத்துக்கு செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனனும் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
போலீஸ் உதவி கமிஷனர் சொல்வது என்ன?
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறுகையில், " பிரிட்ஜ் வெடித்த வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் மேற்கூரை மற்றும் சிமெண்டு பூச்சுகள் அதிகளவில் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. துணிமணிகள் உட்பட சில பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. வெடித்த பிரிட்ஜ் மிகவும் சிறிய அளவில் இருந்தது. அதில் உள்ள கேஸ் கசிந்து பிரிட்ஜ் வெடிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பிரிட்ஜ் தயாரித்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம், மேலும் தடயவியல் துறையை சேர்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் உள்ள தடயங்கள் ஆய்வு செய்யப்படும், மேலும் சம்பவம் நடைபெற்ற வீட்டில் மின்சார வாரியம் சார்பில் வீடு முழுவதும் ஆய்வு செய்தபோது மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆகவே அனைத்து விசாரணைகளும் முழுமையாக முடிந்த பிறகு கேஸ் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது முழுமையாக தெரியவரும்" என தெரிவித்தார்.
பெரும் சோகம்
கணவரின் நினைவுநாளில் அவருக்கு திதி கொடுக்க வந்த மனைவி, தனது தங்கை மற்றும் தம்பியுடன் 'பிரிட்ஜ்' வெடித்து கரும்புகையில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது, அந்தப் பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.