3 குழந்தைகளுடன் அகதியாக தனுஷ்கோடி வந்த தம்பதி
இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதியாக 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வந்தனர்.
தனுஷ்கோடி,
இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதியாக 3 குழந்தைகளுடன் தம்பதி தனுஷ்கோடி வந்தனர்.
குழந்தைகளுடன் தம்பதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அங்கிருந்து அவ்வப்போது அகதிகள் தமிழகத்திற்கு வருவது தொடர்கிறது. இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு ஒன்றில் 3 குழந்தைகளுடன் சாந்தகுமார் (வயது 33)-ரூபலட்சுமி(26) என்ற தம்பதி நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.
இது பற்றி அறிந்ததும் கடலோர போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் மண்டபம் கடலோர காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இலங்கை வவுனியா தேக்கன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இது பற்றி சாந்தகுமார், அவருடைய மனைவி ரூபலட்சுமி கூறியதாவது:-
விலைவாசி குறையவில்லை
இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தாலும், இன்னும் விலை அதிகமாகவே உள்ளது. அரிசி ஒரு கிலோ ரூ.250, பிஸ்கட் ஒரு பாக்கெட் ரூ.100, தீப்பெட்டி ரூ.20, பல்பொடி ஒரு பாக்கெட் ரூ.20, தக்காளி ஒரு கிலோ ரூ.200, உருளைக்கிழங்கு ரூ.200, பெட்ரோல் ரூ.350, டீசல் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ேபாதிய வேலைவாய்ப்புகள் இல்லாததாலும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வாலும் மக்கள் அங்கு வாழ முடியாமல் இன்னும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று வந்த 5 பேருடன் சேர்த்து இதுவரை, கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்திற்கு மொத்தம் 230 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.