ஆட்டிசம் குழந்தைக்கு இடம் தர மறுப்பு: தனியார் பள்ளிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்


ஆட்டிசம் குழந்தைக்கு இடம் தர மறுப்பு: தனியார் பள்ளிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x

ஆட்டிசம் குழந்தைக்கு இடம் வழங்காத வேலூர் தனியார் பள்ளிக்கூடத்துக்கு சென்னை ஐகோர் ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வேலூரில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளி, தன் இணையதளத்தில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் வகுப்பு எடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தது. இதை பார்த்து, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் குழந்தைக்கு பள்ளியில் இடம் கேட்டு பெண் ஒருவர் விண்ணப்பம் செய்தார். அந்த குழந்தைக்கு தேர்வு நடத்திய பள்ளி நிர்வாகம், அதன்பின்னர் தங்களிடம் சிறப்பு ஆசிரியர் இல்லை என்று கூறி, இடம் தர மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், குழந்தையின் தாயார் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய குழந்தை 2 வயது வரை பேசவில்லை. குழந்தையை பரிசோதித்த டாக்டர், சிறிய அளவில் ஆட்டிசம் பாதித்துள்ளதாக கூறி பேச்சு திறன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார்.

இடம் வேண்டும்

சென்னையில் உள்ள சி.பி.எஸ்.சி., பள்ளியில் குழந்தை படித்தது. பின்னர் பணி மாறுதல் பெற்று வேலூர் சென்றபோது, எதிர்மனுதாரர் பள்ளியில் இடம் கேட்டபோது, வழங்க மறுத்து விட்டனர். இது சட்டவிரோதம். என் குழந்தைக்கு இடம் வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, எதிர்மனுதாரரான தனியார் பள்ளிக்கூடம், மனுதாரரின் குழந்தையை சேர்த்துக்கொள்வதாக கூறியது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புனிதருக்கு துரோகம்

மனுதாரரின் குழந்தைக்கு இடம் வழங்க மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டது.

கடந்த 1870-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த அந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளார். இவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார். அப்படிப்பட்ட புனிதரின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பள்ளிக்கூடம் பயன்படுத்துவது மிகவும் துரதிருஷ்டவசமானது.

தாயின் முடிவு

தற்போது மனுதாரரின் குழந்தைக்கு இடம் அளிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இதை தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும்.

அரசுத்தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது. எனவே, தன் குழந்தையை எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்று மனுதாரர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது மிகுந்த திருப்தியளிக்கும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story