பாஞ்சாங்குளம் தீண்டாமை வன்கொடுமை : குற்றவாளிகள் 6 மாதம் வரை கிராமத்திற்குள் நுழைய தடை
குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் சிலர் திண்பண்டம் வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்ற போது, அப்போது அந்த கடைக்காரர் , 'ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் யாரும் தின்பண்டம் வாங்க வர கூடாது என்றும் இதை உங்கள் வீட்டில் போய் சொல்லுங்கள்' என்றும் கூறி அந்த சிறுவர்களை அனுப்பி விடுகிறார்.
இதனை அவரே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டியிலினத்தை சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க மறுத்து தீண்டாமையும், சாதிய பாகுபாடு காட்டி, கடைக்காரர் ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இதுவரை 5 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர் மகேஸ்வரன் (40), ராமச்சந்திரன் (22) ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த குமார், சுதா, முருகன் ஆகிய மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலையில் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோட்டாட்சியர் கந்தசாமி முன்னிலையில் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்தநிலையில், பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் என 5 பேர் 6 மாதம் வரை கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். ஊர் கட்டுப்பாடு என கூறி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.