போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தேனியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து  தேனியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து, தேனியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி நடந்தது.

தேனி

விழிப்புணர்வு மனித சங்கிலி

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீஸ் துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு மனித சங்கிலி தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு மனித சங்கிலியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

10 ஆயிரம் பேர்

நேரு சிலை சிக்னலில் இருந்து பெரியகுளம் சாலையில் அன்னஞ்சி விலக்கு வரையும், மதுரை சாலையில் அரண்மனைப்புதூர் விலக்கு வரையும், கம்பம் சாலையில் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் வரையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போலீசார், ஊர்க்காவல் படையினர், வணிகர்கள், வணிக நிறுவன தொழிலாளர்கள் உள்பட பலரும் அணிவகுத்து நின்றனர்.

14 கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள், 13 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றனர். அப்போது போதைப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் பங்கேற்றனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை சூப்பிரண்டுகள் பால்சுதிர், சுரேஷ், முத்துக்குமார், தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, தி.மு.க. நகர செயலாளர் நாராயணபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கம்பம்

கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். மாணவ, மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் காந்தி நகரில் தொடங்கி அரசு மருத்துவமனை, போக்குவரத்து சிக்னல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, உழவர் சந்தை காந்திஜி வீதி, வேலப்பர் கோயில் தெரு, அரச மர வீதி ஆகிய பகுதிகளில் மனித சங்கிலியாக மாணவ-மாணவிகள் கைகோர்த்து நின்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் சங்கு முத்தையா மற்றும் ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் பள்ளி செயலாளர் முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடந்தது.


Next Story