வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 01.01.2023-ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று காலையில் நடந்தது.

பேரணி

பேரணி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கடற்கரை சாலை வழியாக ரோச்பூங்கா முன்பு முடிவடைந்தது. பேரணியில் சென்ற மாணவ, மாணவிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சைக்கிள் ஓட்டிச் சென்றனர். பேரணியில் தூத்துக்குடி உதவிகலெக்டர் கவுரவ்குமார், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story