ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்துதமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடந்தது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது, கடத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையேயான ஆலோசனை கூட்டம் கம்பம் நகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) இந்துமதி தலைமை தாங்கினார். கேரள மாநிலம் கட்டப்பனை உதவி போலீஸ் சூப்பிரண்டு குரியகோஸ், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இரு மாநில உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர், போலீசார் குழுவாக இணைந்து இரு மாநில சோதனை சாவடிகளிலும் சோதனை நடத்த வேண்டும். அப்போது காய்கறி வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், பஸ் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்த வேண்டும். அரிசி ஆலையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதை அறிந்த ரேஷன் அரிசியை மாவாக அரைக்கும் ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.